பாலிவுட்

சன்னி லியோனின் மெழுகுச் சிலை: டெல்லி அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது

செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகை சன்னி லியோனின் மெழுகுச் சிலை டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது. இதை நேற்று (செவ்வாய்க்கிழமை) சன்னி லியோனே திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், ''நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். என்னுடைய சிலையைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. என்னுடைய சிலையை உருவாக்கிய மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.

என்னுடைய மெழுகு உருவத்தை சரியான வடிவத்தில் உருவாக்க ஏராளமான கலைஞர்கள் பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் கடின உழைப்பைப் பாராட்டுகிறேன். இது உண்மையிலேயே அற்புதமான உணர்வைத் தருகிறது'' என்றார்.

இதற்காக சன்னி லியோனை வைத்து சுமார் 200 அளவீடுகள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. பின் அவற்றை ஒப்பீடு செய்து, கையால் மெழுகுச் சிலை வடிவமைக்கப்பட்டது.

சன்னி லியோனின் மெழுகுச் சிலையை உற்சாகத்துடன் சுற்றிப் பார்த்த அவரின் கணவர் டேனியல் வெபர், அதனுடன் வீடியோ எடுத்துக்கொண்டார்.

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட மேடம் துஸாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகம் உலகின் பல்வேறு இடங்களில் இருக்கிறது. இதை மேரி துஸாட்ஸ் என்பவர் நிறுவினார். டெல்லியில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமிதாப் பச்சன், விராட் கோலி, ஷாரூக் கான், அனில் கபூர் உள்ளிட்ட பலரின் மெழுகுச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT