போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இந்திப் படத்தில் அஜித் நாயகனாக நடிக்கிறார்.
'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 60-வது படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். தமிழ் - இந்தி என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'பிங்க்' இந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். இதே இணையை வைத்து போனி கபூர் மீண்டும் படம் தயாரிக்க முடிவெடுத்து அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்போதைக்கு 'தல 60' என்று இந்தப் படம் அழைக்கப்படுகிறது.
நிஜ வாழ்க்கையிலும் கார் மற்றும் மோட்டார் பைக் பந்தயங்களில் ஆர்வம் கொண்டவரான அஜித்குமார், 'தல 60'-ல் பைக் ரேஸராக நடிக்கவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மிகப் பிரம்மாண்டமாக பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு புடாபெஸ்ட், தென்னாப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் கதையும் பந்தயத்தை மையப்படுத்தி இருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் தன் அனுபவத்தில் கற்ற விஷயங்களையும் கதை விவாதத்தில் பகிர்ந்துள்ளார் அஜித்.
இதற்கு முன் அஜித், 'அசோகா' படத்தில் ஷாரூக்கானின் சகோதரர் கதாபாத்திரத்தில் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். மற்றபடி அஜித்தின் தமிழ்ப் படங்கள் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அவற்றுக்கு சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அஜித் கதாநாயகனாக இந்தியில் நேரடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுவே. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.