தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'கிக்' திரைப்படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் சல்மான் கான் நடிக்க சஜித் நதியாத்வாலா இயக்கத்தில் வெளியான 'கிக்' 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை பாலிவுட்டில் மசாலா படங்களுக்குப் பிரபலமான ரோஹித் ஷெட்டி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது முதல் பாகத்தை இயக்கிய சஜித் நதியாத்வாலாவே இயக்குவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சல்மான்கான் - ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மீண்டும் இந்தப் படத்தில் நாயகன் - நாயகியாக நடிக்கவுள்ளார்கள்.
முன்னதாக, சஜித் நதியாத்வாலவே ரோஹித் ஷெட்டியை சந்தித்து 'கிக் 2' இயக்குவது பற்றிக் கேட்டதாகவும், அவர் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இவற்றை நதியாத்வாலாவின் தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது.
ட்விட்டரில் அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ பக்கத்தில், "தெளிவுபடுத்த விரும்புகிறோம். 'கிக் 2' படத்தின் இயக்குநராக வேறெந்தப் பெயர் வந்தாலும் அதை மறுக்கிறோம். நதியாத்வாலா கிராண்ட்சன் எண்டர்டெய்மெண்ட் தயாரிக்கவுள்ள 'கிக் 2' படத்தை சஜித் நதியாத்வாலாதான் இயக்கவுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.