இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறைச் சொல்லும் திரைப்படத்தில் கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார். ஆனால் இந்த வாய்ப்பு முதலில் வித்யா பாலனுக்குத் தான் வழங்கப்பட்டது.
பின் எப்படி வாய்ப்பு கங்கணாவுக்குப் போனது என்று விசாரித்த போது நமக்குக் கிடைத்த தகவல் இதுதான். படம் பற்றி நிறைய கேள்விகளை முன்வைத்துள்ளார் வித்யா பாலன். வழக்கமாக கதாபாத்திரம் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ள, நடிகர்கள் இப்படி கேள்வி கேட்டுத் தெளிவு பெறுவது வழக்கம். அப்படித்தான் வித்யா பாலனும் எக்கச்சக்கமாக கேள்விகள் கேட்டுள்ளார்.
அந்தக் கட்டத்தில் தயாரிப்பு தரப்பிலே அவ்வளவு தெளிவு இல்லை என்பதால் அவர்களால் வித்யா பாலனின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. இந்த அசவுகரிய நிலையை மாற்ற, நாயகியையே மாற்றிவிட்டது தயாரிப்பு தரப்பு.
அதேநேரத்தில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தையும், பிரபல கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத், கங்கணாவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். கங்கணா நடிப்பில் 'மணிகர்னிகா' படத்துக்கான திரைக்கதையை எழுதியது விஜயேந்திராதான். எனவே, தற்போது கங்கணா ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க இறுதி செய்யப்பட்டுள்ளார்.