ட்விட்டரில் உருவான எதிர்மறை ட்ரெண்ட் தொடர்பாக ரசிர்களுக்கு அக்ஷய்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சல்மான் கான், ஆலியா பட் நடித்திருக்கும் 'இன்ஷால்லா' அடுத்தாண்டு ரம்ஜானுக்கு வெளியாகவுள்ளது. இதே நாளில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்து வரும் 'சூர்யவன்ஷி' திரைப்படமும் வெளியாகவிருந்தது.
ஆனால், இரண்டு படக்குழுவினரும் பேசி 'சூர்யவன்ஷி' படத்தை அடுத்தாண்டு மார்ச் 27-ம் தேதி வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. ’சூர்யவன்ஷி’ படத்தின் புதிய வெளியீட்டு தேதியை சல்மான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு அக்ஷய்குமார் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. #BoycottSooryavanshi, #ShameOnRohitShetty என ஹேஷ்டேக்குகள் உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்தனர். மேலும், சல்மான்கானையும் கடுமையாக சாடத் தொடங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து அக்ஷய்குமார் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சிறுகடிதத்தில் அக்ஷய்குமார், “கடந்த சில நாட்களாக ஒருவிதமான எதிர்மறை விமர்சனப் போக்கு எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மத்தியில் இருந்தே உருவாவதைக் கவனிக்கிறேன்.
உங்கள் அனைவரின் மனக்கவலையும் எனக்குப் புரிகிறது. உங்கள் அனைவரிடமும் கரம் கூப்பி ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இத்தகைய எதிர்மறை ட்ரெண்டில் தயைகூர்ந்து பங்கேற்காதீர்கள். சூர்யவன்ஸியை நான் மிகுந்த நேர்மறை சிந்தையுடன் உருவாக்கினேன். அதை வெளியிடுவதிலும் அதே நேர்மறை எண்ணங்களுடன் இருக்கிறேன். உங்களிடமும் அதையே எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.