'வீரம்' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் விக்கி கவுஷல் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று தெரிகிறது.
அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான ’வீரம்’ திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆனது. பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு தோல்வியடைந்தது. ’வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், ’சூர்யவன்ஷி’, ’லக்ஷ்மி பாம்’, ’தி எண்ட்’ ஆகிய படங்களில் படப்பிடிப்பு இருப்பதால் தற்போது அக்ஷய் குமார் ’வீரம்’ ரீமேக்கிலிருந்து விலகிவிட்டார். அவருக்குப் பதிலாக இளம் நடிகர் விக்கி கவுஷல் நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
’லேண்ட் ஆஃப் லுங்கி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரீமேக்கை ஃபர்ஹாத் சம்ஜி இயக்குகிறார். சஜித் நதியாத்வாலா தயாரிக்கிறார். படக்குழு பற்றிய மற்ற விவரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.