பாலிவுட்

லயன் கிங் படத்தில் ஷாரூக் கான், அவரது மகன் ஆர்யன்

செய்திப்பிரிவு

டிஸ்னியின் 'லயன் கிங்' படத்தின் இந்திப் பதிப்பில், பிரதான கதாபாத்திரமான சிம்பாவின் தந்தை முஃபாசா கதாபாத்திரத்துக்கு ஷாரூக்கும், சிம்பாவுக்கு ஷாரூக்கின் மகன் ஆர்யனும் பின்னணிக் குரல் தரவிருக்கின்றனர்.

1994-ம் வருடம் வெளியான அனிமேஷன் திரைப்படமான 'லயன் கிங்', தற்போது மீண்டும் டிஸ்னி தயாரிப்பில் உருவாகிறது. 2016-ம் ஆண்டு வெளியான 'ஜங்கிள் புக்' போல, தத்ரூபமான கம்ப்யூட்டர் அனிமேஷனில் உருவாகிறது.

இந்தியாவில் 'லயன் கிங்', இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது. ஏற்கெனவே டிஸ்னி - மார்வல் தயாரிப்பான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படத்தை நம்மூர் மொழிகளில் டப்பிங் செய்யும்போது, இங்கு பிரபலமான நட்சத்திரங்களை வைத்து டப்பிங் செய்தனர். படத்துக்கும் அது பெரிய விளம்பரமாக அமைந்து, வசூல் சாதனை படைத்தது.

தற்போது 'லயன் கிங்' படத்தின் இந்திப் பதிப்பிற்கு, முஃபாசா கதாபாத்திரத்துக்கு ஷாரூக் கானும், சிம்பா கதாபாத்திரத்துக்கு ஷாரூக்கின் மகன் ஆர்யனும் டப்பிங் குரல் பேசவிருக்கின்றனர்.

இதுகுறித்து பகிர்ந்துள்ள ஷாரூக், "ஒரு தந்தையாக என்னால் முஃபாசா கதாபாத்திரத்தோடு, அவர் தனது மகனுடன் கொண்டிருக்கும் பிணைப்போடும் நன்றாக தொடர்புப்படுத்திக் கொள்ள முடிகிறது. லயன் கிங்கின் புகழ் காலத்தைக் கடந்த ஒன்று. இந்த மறு உருவாக்கத்தில் எனது மகனுடன் பங்குகொண்டிருப்பது இன்னும் அதை விசேஷமானதாக்குகிறது. எனது இன்னொரு மகன் அப்ராம் இந்தப் படத்தைப் பார்ப்பான் என்பது எங்களுக்கு இன்னும் ஆர்வத்தைத் தருகிறது" என்று கூறியுள்ளார்.

ஞாயிறன்று, ஷாரூக் கான், தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் இருவரது சட்டைக்குப் பின்னும் முறையே, முஃபாசா, சிம்பா என்று எழுதப்பட்டிருந்தது.

ஜூலை 19 அன்று 'லயன் கிங்' வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT