பாலிவுட்

மிக மிக குட்டையான ஆடைகள்: ஜான்வி குறித்த கேத்ரினா கருத்தும், சோனம் கபூர் விளக்கமும்

செய்திப்பிரிவு

ஜான்வி கபூர் பற்றிய கேத்ரினா கைஃப் சொன்ன கருத்தில், நான் ஜான்விக்கு ஆதரவாகப் பேசவில்லை. அது எங்களுக்குள் இருக்கும் ஒரு நகைச்சுவை என்று நடிகை சோனம் கபூர் கூறியுள்ளார்.

போனி கபூர் - ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஜான்வி கபூர், ஜிம் செல்வதை வழக்கமாகக் கொண்டவர். பாலிவுட்டில் பாப்பராஸி புகைப்படக்காரர்கள் அதிகம். ஜான்வி கபூர் ஜிம்முக்குச் செல்லும்போதும், வெளியே வரும்போதும் எடுக்கப்பட்ட அவரது பல புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடிகை கேத்ரினா கைஃப் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், எந்த நட்சத்திரம் ஜிம்/உடற்பயிற்சிக்கான உடைகளைப் பொறுத்தவரை அளவுக்கதிகமாகச் செல்வது என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர், "அளவுக்கதிகமாக என்று சொல்ல முடியாது. ஆனால், ஜான்வி அணியும் மிக மிக குட்டையான உடைகள், எனக்குக் கவலை தருகிறது. அவர், நான் உடற்பயிற்சி செய்யும் ஜிம்முக்கும் வருவார். அதனால், அடிக்கடி நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் அங்கிருப்போம். அவர் பற்றி சில சமயங்களில் நான் கவலை கொள்வதுண்டு" என்று பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து, ஜான்வி சாதாரண உடைகளையும் அணிவார், அதில் அற்புதமாகவும் இருப்பார் என ஜான்வியின் சித்தப்பா மகளும் நடிகையுமான சோனம் கபூர், சமூக வலைதளங்களில் சில புகைப்படங்களைப் பகிர்ந்தார். இது, ஜான்விக்கு ஆதரவான சோனம் கபூரின் பதிவாகவே பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது இதுகுறித்து சோனம் கபூர், "எனது அன்பார்ந்த தோழி கேத்ரினா அப்பாவித்தனமாகச் சொன்ன ஒரு கருத்துக்காக நான் ஜான்விக்கு ஆதரவாகப் பேசவில்லை. அது எனக்கும், என் சகோதரிக்கும் (ஜான்வி) இடையே இருக்கும் ஒரு நகைச்சுவை. ஜிம்முக்கு வெளியே அவரது புகைப்படங்கள் பற்றியது. ஊடகத்தினரே... தயவுசெய்து தேவையில்லாத சர்ச்சையை உருவாக்க வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.

ஜான்வியோ, கேத்ரினாவோ இதுகுறித்து இன்னும் எதுவும் பேசவில்லை.

SCROLL FOR NEXT