நடிகர் அமிதாப் பச்சன் தற்போது நடித்து வரும் படத்தின் 14 நிமிடக் காட்சியை ஒரே டேக்கில் பேசி முடித்துள்ளார்.
’கலி கலி சோர் ஹை’, 'லைஃப் பார்ட்னர்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ருமி ஜாஃப்ரி இயக்கும் படம் 'செஹ்ரே'. இதில் அமிதாப் பச்சனும், இம்ரான் ஹாஷ்மியும் நடித்து வருகின்றனர். அடுத்த வருடம் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் வழக்கறிஞராக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதன் கடைசி நாளில், கடைசியாக ஒரு நீளமான காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதில் அமிதாப் கதாபாத்திரம் 14 நிமிடங்கள் தொடர்ந்து வசனம் பேச வேண்டும். இந்தக் காட்சி படமாக்கப்பட்டது குறித்து ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
"இன்று அமிதாப் பச்சன் இந்திய சினிமாவில் இன்னொரு வரலாறைப் படைத்துள்ளார். 'செஹ்ரே' படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பில், கடைசிக் காட்சி படமாக்கப்பட்டது. அமிதாப் பச்சன் 14 நிமிடக் காட்சியை ஒரே டேக்கில் பேசி முடித்தார். ஒட்டுமொத்தக் குழுவும் எழுந்து நின்று கைதட்டினோம். சார், உலகத்திலேயே நீங்கள் தான் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகமே இல்லை" என்று ரசூல் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே அமிதாப் பச்சன் வழக்கறிஞராக நடித்து வெளியான 'பிங்க்' படத்தில் அவரது நடிப்பும், வசனங்களும் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.