பாலிவுட்

அந்தரங்கத்தில் ஊடுருவுவது பிடிக்கவில்லை: அனுராக் கஷ்யப் காட்டம்

ஸ்கிரீனன்

தனது அந்தரங்கத்தில் ஊடகங்கள் ஊடுருவுவது பிடிக்கவில்லை என இயக்குநர் அனுராக் கஷ்யப் கூறியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன், மருத்துவமனைக்கு வெளியே அனுராக் கஷ்யப் இருப்பதைப் படம்பிடித்த புகைப்படக் கலைஞர்களை, அனுராக் கஷ்யப் திட்டித் தீர்த்தார். இதுபற்றிய வீடியோவும் இணையத்தில் வந்தது. அதில், தன்னைப் புகைப்படம் எடுப்பவர்களை, 'உங்களுக்கு வேறு வேலை இல்லையா? இதுதான் வேலையா?' என்று அனுராக் கஷ்யப் கேட்கிறார்.

கஷ்யப்பின் இந்தக் கோபம், சர்ச்சையை உருவாக்கியது. இதுபற்றி ‘கேம் ஓவர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கேட்ட போது, "போய் உங்கள் முகத்தைப் பாருங்கள் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் வேறொருவரின் தனிப்பட்ட இடத்தில் நின்றுகொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றேன்.

நான் செல்லும் இடம் பற்றியெல்லாம் ஊடகங்களுக்குத் தகவல் சொல்லும் மேலாளர் என்னிடம் இல்லை. நான், என் தனிப்பட்ட வேலையைச் செய்து கொண்டிருக்கும்போது ஒருவர் புகைப்படம் எடுப்பது, எனது அந்தரங்கத்தை ஊடுருவுவதாக நான் நினைக்கிறேன்.

அப்படியான நேரங்களில் நான் செல்ஃபி எடுக்கக்கூட அனுமதிப்பதில்லை. நான் சரியென்று நினைத்ததைத்தான் பேசுகிறேன்" என்று அனுராக் பதில் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அனுராக்கை புகைப்படம் எடுக்க புகைப்படக் கலைஞர்கள் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT