துல்கர் சல்மான் நடிக்கும் பாலிவுட் படத்தில், அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார்.
மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் நடித்துவந்த துல்கர் சல்மான், ‘கர்வான்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தில் துல்கருடன் சேர்ந்து இர்ஃபான் கான், மிதிலா பால்கர், கிர்த்தி கர்பந்தா, அமலா அக்கினேனி ஆகியோர் நடித்துள்ளனர். ஆகாஷ் குரானா இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், ‘த ஜோயா ஃபேக்டர்’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான். அனுஜா சவுகான் எழுதிய ‘த ஜோயா ஃபேக்டர்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்படுகிறது. அபிஷேக் சர்மா இயக்கும் இந்தப் படத்தில், துல்கர் ஜோடியாக சோனம் கபூர் இணைகிறார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் எனத் தெரிவித்துள்ளார் துல்கர்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் உருவாகிவரும் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான ‘மகாநதி’ மற்றும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் துல்கர் சல்மான்.