தென்னிந்திய நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. இதில் பாலிவுட் நடிகை ரிச்சா சதா, ஷகிலாவாக நடிக்கிறார்.
நடிகை ஷகிலா, தனது 16 வயதில் சினிமா துறையில் நுழைந்தவர். மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் வலம்வந்து வெகுவிரைவிலேயே பிரபலம் அடைந்தார்.
ஆண்கள் மட்டுமே கோலோச்சிய துறையில் எந்த ஹீரோ பிரபலங்களின் திரைப்படங்களில் நடிக்காமலேயே தனித்து சாதிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றவர்.
இந்நிலையில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக உருவாகிறது. ஷகிலா கதாபாத்திரத்தில் ரிச்சா சதா நடிக்கிறார்.
இத்திரைப்படம் குறித்து ரிச்சாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், ''மலையாள சினிமாவின் புகழ்பெற்ற நடிகர்களுக்கு இணையான ஒரு கவர்ச்சி நடிகை ஷகிலா. ஆசியா கண்டம் முழுவதிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
அதைப்போல புகழை இதுவரை யாரும் பெற்றதாக நாம் கேள்விப்படவில்லை. இத்திரைப்படம் மிகச் சிறந்த கதை ஒன்றைச் சொல்கிறது. பார்வையாளர்கள் வரவேற்கும்விதமான மிகச் சிறந்த ஒரு கதையாக அது இருக்கும்'' என்றார்.
இத்திரைப்படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இன்னும் பெயர் சூட்டப்படாத இத்திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.
சில மாதங்களுக்கு முன், வாய்ப்புகளுக்காக சமரசம் செய்துகொள்வது, போலியான உறவுகளில் இருப்பது என திரைத்துறையின் செயல்பாடு வருத்தம் அளிப்பதாகக் கூறி திரைத்துறையில் சலசலப்பை ஏற்படுத்திய அதே ரிச்சாதான் இவர்.