பிரதமர் மோடியைப் பேட்டி கண்டதற்காக, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் குடியுரிமையை சுட்டிக்காட்டி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தற்போது, அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது சரிதானா? என்றொரு சர்ச்சையும் எழுப்பப்பட்டுள்ளது.
எழுத்தாளர் அபூர்வா அஸ்ராணி இந்த சர்ச்சையை எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், 2017-ம் ஆண்டு தேசிய விருது தெரிவுக் குழுவில் நடுவராக இருந்த இயக்குநர் ப்ரியதர்ஷன், அக்ஷய் குமாருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இது தொடர்பாக ப்ரியதர்ஷன், "இப்படியான சிந்தனைகள் எல்லாம் எங்கிருந்து உருவாகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இந்திய பாஸ்போர்ட் தவிர, வேறு ஒரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவருக்கு தேசிய விருது கொடுக்கக்கூடாது என்று எந்தத் தடையும் இல்லை. இந்த விஷயத்தில் என்னை நம்புங்கள். அக்ஷய் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றபோது, நான் தான் நடுவராக இருந்தேன். அவரது வெற்றியில் எந்த சர்ச்சையும் இல்லை. ‘ரஸ்டோம்’ படத்தில் அவரது நடிப்புத்திறனுக்காக மட்டுமே விருது வழங்கப்பட்டது. அது ஒருமித்த முடிவும்கூட. வெளிநாட்டுப் பிரஜைக்கு தேசிய விருது வழங்கக்கூடாது என்று எந்தக் கெடுபிடியும் இல்லை.
இந்திய கேளிக்கைத் துறை, வாய்ப்புகளால் நிரம்பியது. இதில் ஏதும் புதிதில்லை. ஆனால், திரைத்துறையில் அக்ஷய் நண்பர்கள் சிலரே காட்டும் சுயநலம், மூச்சுமுட்ட வைக்கிறது. கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பதற்காக அவரை இவ்வளவா ட்ரோல் செய்வார்கள்? அக்ஷயுடன் பணியாற்றிய ஒவ்வொரு தயாரிப்பாளர், இயக்குநரிடமும் நான் பேசினேன். அக்ஷயுடன் பணியாற்றிய பின்னரே அவர்களில் நிறைய பேருக்குத் தொழிலில் ஏற்றம் வந்திருக்கிறது என்றே கூறியிருக்கிறார்கள்" என்றார்.