பாலிவுட்

தேசபக்தியை நீங்கள் யாருக்கும் நிரூபிக்கத் தேவையில்லை அக்‌ஷய்: அனுபம் கெர் ஆதரவுக்கரம்

செய்திப்பிரிவு

பிரதமர் மோடியைப் பேட்டி கண்டதற்காக விமர்சிக்கப்படும் அக்‌ஷய் குமார், யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார் பாலிவுட் நடிகர் அனுபம் கெர்.

பிரதமர் நரேந்திர மோடியை, நடிகர் அக்‌ஷய் குமார் அண்மையில் பேட்டி கண்டார். அக்‌ஷய் குமார் கண்ட நேர்காணல், முழுக்க முழுக்க அரசியல் சார்பற்றது என்று பிரபலப்படுத்தப்பட்டது.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடியை நடிகர் அக்‌ஷய் குமார் பேட்டி கண்ட நாள் முதல் இன்றுவரை அவரைக் கிண்டல் செய்பவர்களின் எண்ணிக்கை, அதுவும் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும், அக்‌ஷய் குமாரின் குடியுரிமையை சுட்டிக்காட்டி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மோடியைப் பேட்டி கண்டதற்காக விமர்சிக்கப்படும் அக்‌ஷய் குமார், யாருக்கும் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார் பாலிவுட் நடிகர் அனுபம் கெர்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்களைப் பார்த்து கேள்வி எழுப்புபவர்களுக்கு எல்லாம் நீங்கள் பதிலளித்துக் கொண்டிருப்பதை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் தேசத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றை, அன்பை யாருக்கும் நிரூபிக்கத் தேவையில்லை.

எனவே, இனியும் நீங்கள் எந்த விளக்கமும் கொடுக்காதீர்கள். இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசும் என்னைப் போன்றோர், உங்களைப் போன்றோரை அவமதிக்க வேண்டும் என்பதே இத்தகைய நபர்களின் ஒரே தொழில். நீங்கள் ஒரு செயல்வீரர். அதனால், எதற்கும் எந்த விளக்கமும் கொடுக்கத் தேவையில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.

அனுபும் கெர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘தி ஆக்ஸிடென்ட்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற சர்ச்சைக்குரிய படத்தை எடுத்தவர். இவர் பாஜக அனுதாபி என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT