பாலிவுட்

திருமணம் செய்துகொள்: துப்பாக்கி முனையில் போஜ்புரி நடிகையை மிரட்டிய இளைஞர்

ஸ்கிரீனன்

போஜ்புரி நடிகை ரிது சிங் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென துப்பாக்கி முனையில் மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா பகுதியில் தனது படப்பிடிப்புக் குழுவுடன் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார் நடிகை ரிது சிங். அப்போது பங்கஜ் யாதவ் என்ற இளைஞர், ரிது சிங்கின் அறையில் அத்துமீறி நுழைந்துள்ளார். துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி பணயக் கைதியாகப் பிடித்துவைத்து, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அச்சுறுத்தியுள்ளார்.

ரிது சிங்கின் கூச்சலைக் கேட்டு அவரைக் காப்பாற்ற அந்தப் பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞர் முயற்சித்துள்ளார். ஆனால், பங்கஜ் அவரைத் துப்பாக்கியால் சுட, இடுப்புப் பகுதியில் குண்டு பாய்ந்தது. அசோக் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு போலீஸை வரவழைத்துள்ளது ஹோட்டல் நிர்வாகம். காவல்துறை கண்காணிப்பாளர் பாடில், தனது அணியினருடன் அங்கு விரைந்து வந்தார். 

பங்கஜை சமாதானம் செய்ய பாடில் முயற்சித்துள்ளார். ஆனால், ரிது சிங்கைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பிடிவாதமாகப் பேசியுள்ளார் பங்கஜ். தொடர்ந்து பாடில் பேசியதைக் கேட்டு, துப்பாக்கியைப் படுக்கை மீது வைத்துள்ளார் பங்கஜ். போர்வையை இழுத்து துப்பாக்கியை எடுக்க பாடில் முயற்சித்தபோது துப்பாக்கி கீழே விழுந்துள்ளது. அந்தப் பதட்டத்தில் துப்பாக்கியை உடனடியாகக் கையில் எடுத்த பங்கஜ், பாடிலை நோக்கி சுட்டுள்ளார். ஆனால், பாடில் குனிந்து தப்பித்துள்ளார்.

இந்த சத்தம் கேட்டு வெளியே இருந்த போலீஸார் உள்ளே நுழைந்து, பங்கஜை மடக்கிப் பிடித்துள்ளனர். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கு இந்தப் பரபரப்பு சம்பவம் நீண்டுள்ளது.

நடிகை ரிது இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பல நாட்களாக ரிதுவைப் பின்தொடர்ந்து, தற்போது துப்பாக்கி முனையில் மிரட்டிய பங்கஜ் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT