பாலிவுட்

‘காஞ்சனா’ இந்தி ரீமேக்: சரத்குமார் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன்?

செய்திப்பிரிவு

‘காஞ்சனா’ இந்தி ரீமேக்கில், சரத்குமார் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் ‘காஞ்சனா’. ‘முனி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இந்தப் படம்,  2011-ம் ஆண்டு ரிலீஸானது. ராகவா லாரன்ஸ் ஜோடியாக ராய் லட்சுமி நடிக்க, திருநங்கை கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்தார்.

கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, தேவன், மனோபாலா, மயில்சாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். சூப்பர் ஹிட்டான இந்தப் படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு, அதே தேதியில் ரிலீஸானது. மேலும், கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில், 8 வருடங்களுக்குப் பிறகு இந்தியில் ‘காஞ்சனா’ ரீமேக் செய்யப்படுகிறது. ராகவா லாரன்ஸ் இயக்க, அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கிறார். தற்போதைக்கு இந்தப் படத்துக்கு ‘லட்சுமி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அக்‌ஷய் குமாருக்காகக் கதையில் சிறிது மாற்றம் செய்துள்ளார் ராகவா லாரன்ஸ். தமிழில் பேய்க்குப் பயந்தவராக லாரன்ஸ் நடித்தார். ஆனால், இந்தியில் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை மாற்றி, பயப்படாதவராக அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.

இந்நிலையில், சரத்குமார் நடித்த திருநங்கை கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘காஞ்சனா’ படத்தின் மூன்றாம் பாகம், கடந்த வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT