பாலிவுட்

பிரம்மாஸ்திரா வெளியீட்டு தேதியில் மாற்றம்: இயக்குநர் கூறும் காரணம்

ஸ்கிரீனன்

அயன் முகர்ஜி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் 'பிரம்மாஸ்திரா' வெளியீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிரம்மாஸ்திரா'. தர்மா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

3 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால், இப்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து இயக்குநர் அயன் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

'பிரம்மாஸ்திரா' படத்தின் கனவானது என்னுள் 2011-ல் உருவானது;  2013-ல் 'Yeh Jawaani Hai Deewani' படம் முடித்தவுடன் இப்படத்திற்கான கதை-திரைக்கதையை உருவாக்கத் தொடங்கினேன். கதை, திரைக்கதையாக்கம், கதாபாத்திரப் படைப்பு,  இசை மட்டுமல்லாமல் vfx துறையிலும் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப் போகும் ஒரு பிரமிப்பான, பிரமாண்டமான  இமாலய முயற்சி இது.

இப்படத்தின் லோகோவை(Logo) 2019-ம் ஆண்டு கும்பமேளாவில் பிரம்மாண்டமாக ஆகாயத்தில் வெளியிட்டோம்; அப்போது கூட இப்படத்தை 2019 கிறிஸ்துமஸ் அன்று வெளியிட முடியுமென உற்சாகமாக இருந்தோம். ஆனால் கடந்த ஒரு வார காலமாக எங்கள் படத்தின் vfx தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தை நினைத்த அளவுக்கு பிரம்மாண்டமாக கொண்டு வர சற்று அதிக காலம் தேவை என கருத ஆரம்பித்தனர்.

இதை மனதில் கொண்டு 'பிரம்மாஸ்திரா' திரை வெளியீட்டை 2019 கிறிஸ்துமஸ் விடுமுறையிலிருந்து 2020 கோடை விடுமுறை காலத்திற்கு தள்ளிவைக்க முடிவெடுத்திருக்கின்றோம்.

இவ்வாறு அயன் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT