வருடத்துக்குக் குறைந்தது ஒரு 100 கோடி ரூபாய் வசூல் படம் தருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் சல்மான் கான் இந்த வருடம் 'பாரத்' படத்துடன் தயாராகி இருக்கிறார். படத்தின் முதல் போஸ்டரை இன்று தனது சமூக வலைதளப் பக்கங்களில் சல்மான் கான் பகிர்ந்துள்ளார்.
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சற்று வயதான தோற்றத்தில் காணப்படும் சல்மான், பாரத் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் போஸ்டரைப் பகிர்ந்ததோடு, அதனுடன், "எனது தாடியும், தலைமுடியும் மட்டுமே கருப்பு வெள்ளை. ஆனால் எனது வாழ்க்கை வண்ணமயமானது" என்று குறிப்பிட்டுள்ளார். இது படத்தின் கருவா அல்லது சல்மானின் சொந்தக் கருத்தா என்பது தெளிவாகவில்லை.
சல்மானின் தந்தையாக ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார். 'ஆன் ஓட் டு மை ஃபாதர்' ('An Ode To My Father') என்கிற கொரிய படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது. இந்திய வரலாற்றை ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் இருந்து இந்தப் படம் சொல்கிறது. கேத்ரீனா கைஃப், தபு, திஷா படானி உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கின்றனர்.
'டைகர் ஜிந்தா ஹை' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சல்மானை இந்தப் படத்தில் இயக்குகிறார் அலி அப்பாஸ் ஜாஃபர். ஜூன் 5 அன்று 'பாரத்' வெளியாகவுள்ளது.