ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, தன்னுடைய பிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் ‘தடக்’ படத்தின் மூலம் 2018-ல் பாலிவுட்டில் அறிமுகமானார். கரண் ஜோஹர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஜான்விக்கு ஜோடியாக ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் கட்டார் நடித்திருந்தார்.
தற்போது கன்ஜன் சக்சேனாவின் சுயசரிதையில் நடித்துவரும் ஜான்வி, கரண் ஜோஹரின் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதற்கிடையே இன்று (புதன்கிழமை) தன்னுடைய 22-வது பிறந்தநாளை கொண்டாடினார் ஜான்வி. தன்னுடைய தந்தை போனி கபூர் மற்றும் சகோதரி குஷியுடன் வாரணாசிக்குச் சென்றார். காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லவேண்டும் என்றும் கங்கை ஆரத்தியைப் பார்க்கவேண்டும் என்றும் ஜான்வி தெரிவித்தார். முன்னதாக கங்கை நதிக்கரையில் படகில் மூவரும் பயணம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் எளிமையாகத் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் ஜான்வி. பிறந்தநாள் கேக்கை வாளைக் கொண்டு வெட்டினார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.