அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார் கீர்த்தி சுரேஷ்.
அறிமுகமான சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். ‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்ரியாக அவர் நடித்ததைப் பார்த்து, தென்னிந்திய சினிமாவே ஆச்சரியப்பட்டது. அந்தப் படத்தின் மூலம் எல்லோராலும் கொண்டாடப்பட்டார்.
இதனால், தமிழ் மட்டுமின்றி, மற்ற மொழிகளிலும் கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் வருகின்றன. மலையாளத்தில் ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’, நரேந்திரநாத் இயக்கும் தெலுங்குப் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்திவரும் கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
‘பதாய் ஹோ’ இந்திப் படத்தை இயக்கிய அமித் ரவிந்தர்நாத் ஷர்மா, கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கும் படத்தை இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவன் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இதில், ஹீரோவாக அஜய் தேவ்கன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியக் கால்பந்து அணியின் முதல் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹிம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஜய் தேவ்கன். சையத் பயிற்சியாளராக இருந்தபோதுதான், 1951 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியக் கால்பந்து அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, நாகேஷ் குக்குநூர் இயக்கத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் தயாராகும் இந்தப் படம், ஹீரோயினை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கிறது.