பாலிவுட்

ரன்வீர் சிங் வானாளாவ புகழ்ந்து தீட்டிய கடிதம்: இணையதளத்தில் வெளியிட்ட தீபிகா

ஐஏஎன்எஸ்

''உலகின் சிறந்த நடிகை தீபிகா'' என்று வானளாவ புகழ்ந்து தீட்டிய ரன்வீர் சிங் கடிதத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டு திருமணமான கையோடு தீபிகா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

''தீபிகா படுகோனே மிக அற்புதமான ஒரு பெண், உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவர் அவர். அதுமட்டுமின்றி என் வாழ்க்கையை மதிப்புமிக்கதாக மாற்றியவர்'' என்று ரன்வீர் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

தீபிகா கடந்த ஜனவரி 5 அன்று தனக்கென்று ஒரு புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். அதில் முதல் பதிவாக ரன்வீர் சிங் தீபிகாவுக்கு எழுதிய கடிதத்தையே வெளியிட்டுள்ளார்.

இக்கடிதத்தில் தீபிகாவுடனான தனது உறவு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

''தீபிகாவின் சிறந்த குணங்களைப்பேசுவதே ஒரு சவாலாக உள்ளது. அவரைப் பற்றி உயர்வாக நினைப்பதை சொல்லமுடியாமல் பொங்கிவழியும் ஒரு தவிப்பு அது.

என்றாலும் பொங்கிவழியும் எனது எண்ணங்களைப் பேச மொழி சரியாக கட்டுப்படுத்தி அனுமதிக்கும் என்று நினைக்கிறேன். முயற்சிக்கிறேன்.

இந்த உலகில் அவரோடு மிகவும் நெருக்கமானவன் நான் என்பதை என்னால் சொல்லமுடியும். அவரை ஆழமாக அறிவேன். அவருடன் சில படங்களில் பணியாற்றும்போது நெருக்கமாக பழகியுள்ளேன்.

தீபிகா தனக்குள் ஒரு பிரபஞ்சத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார்: அன்பு, இரக்கம், அறிவுத்திறன், அழகு, கருணை மற்றும் அனுதாபம். இந்த குணங்கள் அவரை ஒரு உண்மையான மற்றும் நம்பகமான கலைஞராக ஆக்கியுள்ளது. அதனாலேயே உலகில் சிறந்த நடிகர்களில் ஒருவராக தீபிகா உள்ளார்.

ஒரு பொறுப்பை எடுத்துக்கொண்டால் அதை சிறப்பாக முடிப்பதில் உள்ள ஒழுங்கு யாரிடமும் பார்க்கமுடியாத ஒன்று. தான் செல்லும் பாதையில் வெற்றிபெற்று மீண்டும் அதை மாற்றியமைப்பார். நல்லொழுக்கம், நன்னெறி அனைவரிடமும் மரியாதை இதுதான் தீபிகா.

என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறந்த மனிதனாக மாற அவரும் ஒரு காரணம். என் வாழ்வை மதிப்புள்ளதாக ஆக்கிய தீபிகாவே என் வாழ்க்கையின் உண்மையான ஒளி.''

என்று கடிதத்தில் ரன்வீர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட்டில் வெளியான "பத்மாவத்", "கோலியான் கி ராஸ்லீலா ராம்-லீலா" மற்றும் "பாஜிரோ மஸ்தானி" போன்ற படங்களில் ஒன்றாக இணைந்துநடித்த இவர்கள், கடந்த ஆண்டு நவம்பரில் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.

SCROLL FOR NEXT