சமூக வலைதளத்தில் வைரலான கங்கணா ரணாவத் வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்த நிலையில், கங்கணாவின் சகோதரி அதற்கு பதில் அளித்துள்ளார்.
கங்கணா ரணாவத் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மணிகர்ணிகா'. ஜீ ஸ்டூடியோ தயாரித்துள்ள இப்படத்தை க்ரிஷ் மற்றும் கங்கணா ரணாவத் ஆகிய இருவரும் இயக்கியுள்ளனர். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தின் வசூல் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.
இப்படத்துக்காக கங்கணா ரணாவத் குதிரை ஓட்டக் கற்றுக் கொண்டதாகவும், அவரே சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், சில நாட்களுக்கு 'மணிகர்ணிகா' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோ வெளியானது.
அந்த வீடியோ பதிவு 'மணிகர்ணிகா' சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்டுள்ளது. அதில் மரக்கட்டை குதிரை போன்ற ஒரு பொம்மையில் கங்கணா அமர்ந்திருப்பது போலவும், அந்த குதிரை மோட்டர் மூலமாக நகர்வது போலவும் இருக்கிறது. இதனை வைத்து பலரும் கங்கணா ரணாவத்தைக் கிண்டல் செய்யத் தொடங்கினார்கள்.
பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து கிண்டல் செய்யவே, கங்கணா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி சந்தெல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
''வேறு எப்படி குதிரை மீது சவாரி செய்வதை க்ளோஸ் அப்பில் எடுக்க முடியும்? இதன் பெயர்தான் இயந்திரக் குதிரை. 'க்ளாடியேடர்', 'தி லாஸ்ட் சாமுராய்', 'ப்ரேவ் ஹார்ட்' உள்ளிட்ட படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'மணிகர்ணிகா'விலும். க்ளோஸ் அப் காட்சிகளுக்கு மட்டும். தொழில்நுட்பத்தைப் பார்க்கும்போது முட்டாள்கள் ஆச்சரியப்படுவார்கள். முட்டாள்கள்'' என்று ரங்கோலி சந்தெல் தெரிவித்துள்ளார்.