பாலிவுட்

படப்பிடிப்பின் போது சக நடிகர்களால் துன்புறுத்தலுக்கு ஆளானேன்: கங்கணா ரணவத் பேச்சு

பிடிஐ

படப்பிடிப்பில் இருக்கும்போது சக நடிகர்களால் பல முறை தான் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவை #மீடு குற்றச்சாட்டைப் போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் இல்லையென்றாலும் அவை தன்னை அச்சுறுத்தியதாகவும், அவமானப்படுத்தும் வகையில் இருந்ததாகவும் நடிகை கங்கணா ரணவத் பேசியுள்ளார். 

சில மாதங்களுக்கு முன் மீடூ குற்றச்சாட்டுகள் பாலிவுட்டை சூறாவளி போல தாக்கின. பல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பல்வேறு பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கங்கணா ரணவத்தும், குயின் பட இயக்குநர் விகாஸ் பால் மீது மீடூ குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த இன்னொரு பெண்ணுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். 

தற்போது, பாலியல் தொந்தரவுக்கு ஆளாகவில்லையென்றாலும் சக நடிகர்களால் பல முறை தான் காயப்பட்டிருப்பதாக கங்கணா கூறியுள்ளார். 

"துன்புறுத்தல் பல தளங்களில் நடக்கும். படப்பிடிப்பு தளத்தில் பல முறை நடக்கும். நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை. ஆனால் ஈகோவினால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். பல முறை பல காரணங்களால் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன். அவை மீடூ குற்றச்சாட்டின் கீழ் வராது என்றாலும் அவையும் துன்புறுத்தல்களே. 

ஆறு மணி நேரம் வேண்டுமென்றே காக்க வைப்பார்கள், வேண்டுமென்றே என்னை அழைத்து நடிக்க வைக்க பல மணி நேரம் காத்திருக்க வைப்பார்கள், தவறான தேதிகள் கொடுத்து வாய்ப்புகளை தவறவிடச் செய்வார்கள். கடைசி நிமிடத்தில் நாயகர்கள் படப்பிடிப்பை ரத்து செய்வார்கள்.

என்னை தனித்து ஒதுக்கிவிட்டு பட சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடக்கும், படத்தின் ட்ரெய்லர் நான் இல்லாமல் வெளியாகும், இப்படி பல அனுபவங்கள். என்னிடம் சொல்லாமலேயே வேறொருவர் எனக்கு டப்பிங்க் கொடுக்க அழைக்கப்படுவார். இது நடிகரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். 

மீடூ சர்ச்சைக்குப் பிறகு பலரும் பயப்படுகின்றனர். கண்டிப்பாக பயப்படவேண்டும் தான். துறையில் ஆண்கள் பயத்தில் உள்ளனர். இது இதோடு நிற்கப்போவதில்லை. பிரச்சினையின் ஆழம் வரை சென்று நாம் தீர்க்கும் வரை இது தொடரும். ஏனென்றால் அடிப்படையில் இது ஆணாதிக்க சமூகம். 

தவறு செய்பவர்கள் அஞ்சும் நிலைக்கு நாம் வர வேண்டும். பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் எனும் கருத்தெல்லாம் வரக்கூடாது. கண்ணியமில்லாமல் வாழ்க்கையில்லை என்று நம்புபவள் நான். நாம் குரல் கொடுப்பது குறித்தெல்லாம் கவலைப்படக் கூடாது. 

படப்பிடிப்பு தளத்தில் கடுமையான விதிமுறைகள் இருக்க வேண்டும். அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தனிப்பட்ட முறையிலும், மூடிய கதவுகளுக்கு பின்னாலும் மட்டும் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. பிரச்சினைகள் உரியவர்களிடம் எடுத்துச் செல்லப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய உடனடித் தேவை. 

ஒருவர் புகார் தெரிவிக்கும் போது இயக்குநரோ, தயாரிப்பாளரோ, யாரோ ஒருவர் அதை தீர்க்க வேண்டும். இது போன்ற விஷயங்களை நாம் இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கங்கணா பேசியுள்ளார்.

ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் கங்கணா நடிக்கும் 'மணிகார்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி' திரைப்படம் ஜனவரி 25 அன்று வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT