'மணிகார்னிகா' இயக்குநர் யார் என்று ட்விட்டர் பக்கத்தில் ரில் கங்கணா ரணவத் மற்றும் க்ரிஷ் தரப்பு மோதலால் சர்ச்சை வெடித்துள்ளது.
கங்கணா ரணவத் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மணிகார்னிகா'. ஜீ ஸ்டூடியோ தயாரித்துள்ள இப்படத்தை க்ரிஷ் மற்றும் கங்கணா ரணவத் இயக்கியுள்ளனர். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் வெளியான 5 நாட்களில் 52 கோடி வசூல் செய்துள்ளது.
இப்படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு தான் பாலகிருஷ்ணா நடித்த 'என்.டி.ஆர்' படத்தை இயக்கினார் க்ரிஷ். ஆனால், சில காட்சிகளை மட்டும் மறுபடியும் ஷூட்டிங் செய்து சேர்த்தார் கங்கணா ரணவத் . அதனால் தன் பெயரையும் இயக்குநர் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.
'மணிகார்னிகா' படம் வெளியானவுடன், பலரும் கங்கணா ரணவத் இயக்கம் மற்றும் நடிப்பு பிரமாதம் எனக் குறிப்பிட்டார்கள். இது தொடர்பாக இயக்குநர் க்ரிஷ் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. தற்போது கங்கணா ரணவத் தரப்பும், க்ரிஷ் தரப்பும் ட்விட்டர் பக்கத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
'மணிகார்னிகா' சர்ச்சைத் தொடர்பாக கங்கனாவின் சகோதரி ரங்கோலி சந்தெல் தனது ட்விட்டர் பக்கத்தில் க்ரிஷின் ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கூறியிருப்பதாவது:
அக்டோபர் 4ம் தேதியன்று விஜேந்திர பிரசாத்துக்கு கங்கனாவின் மெசேஜ்களை என் நண்பர்கள் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகக் கூறுகிறேன்.. கங்கனா க்ரிஷ்ஷின் பெருமைக்காகவே போராடியதோடு படக்குழுவின் ஒரு அங்கமாக இருக்க அவரிடம் கெஞ்சினார். ஆனால் க்ரிஷ் படத்தை கெடுத்துக் குட்டிச்சுவராக்க என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்தார்.
ஒளிப்பதிவாளரை வெளியேற்றினார், முந்தைய படக்குழுவில் பணியாற்றிய உதவி இயக்குநர்களை கங்கனாவுடன் பணியாற்ற அனுமதிக்கவில்லை. படக்குழுவில் ஒருவரையும் க்ரிஷ் ஆதரிக்கவில்லை, ஆனால் இப்போது 'மணிகர்னிகா' படம் தன் குழந்தை என்று உரிமை கோருகிறார். என்ன ஒரு சந்தர்பவாதி... இந்தப் படத்துறை என்னை சிரிக்க வைக்கிறது.
கங்கனாவின் மகத்துவம் என்னவெனில் அனைவருக்கும் எதிராகப் பொராடி க்ரிஷ்ஷுக்குப் பெருமை சேர போராடினார். க்ரிஷ் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், கங்கனா எங்கு இருக்கிறார் என்று பாருங்கள்... அதனால்தான் அவர் இப்போது இருக்கும் இடத்திற்கு நீங்கள் ஒருபோதும் செல்லமுடியாது என்பதை உணர்கிறீர்களா... க்ரிஷ் ஒருவரது அழைப்பையும் ஏற்கவில்லை,
காரணம் க்ரிஷ்ஷுக்கு கங்கனா சக-இயக்குநர் என்ற அந்தஸ்தை அளித்தார், கடைசி கட்-ஐ க்ரிஷ் பார்க்க வேண்டும் என்று விரும்பினார், ஆனால் அவர் வரவேயில்லை, பார்க்கவில்லை. ஆனால் இப்போது படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டவுடன் ஹிட் ஆனவுடன் மிகவும் சாமர்த்தியமாக தனக்கு பெருமை கோருகிறார். என்ன ஒரு சந்தர்பவாதி.
டிசம்பர் 6ம் தேதியன்று படத்தை பார்க்குமாறு க்ரிஷ்ஷுக்கு கங்கனா அழைப்பு விடுத்ததற்கான ஆதாரம் இங்கு இருக்கிறது. இதற்கு நீங்கள் விளக்கம் அளிக்க முடியுமா? தொடர்ந்து தாக்குதலுக்கும் சதி வேலைகளுக்கும் ஆளான கங்கனா மிகவும் மன உளைச்சலடைந்துள்ளார்,
இதனால் தான் ஜெர்மனியிலிருந்து இந்த மெசேஜை அனுப்பியுள்ளார். உண்மை என்னவெனில், அவருக்குத் தகுதியான ஒரு பிரேக் இந்தப் படத்தின் மூலம் கிடைத்துள்ளதை பொய்யர்களாலும், சந்தர்பவாதிகளாலும் அவரால் முழுதும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியவில்லை என்பதே.
இவ்வாறு கங்கனாவின் சகோதரி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குநர் க்ரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஒரு நபரின் பொய்கள் மற்றும் தகிடுதத்தங்களின் அடிப்படையில் திரைப்படம் இயக்கும் என் திறமையை நானே தற்காத்துக்கொள்ளும் அபத்தமான ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
ரங்கோலியின் இந்த மெசேஜ்கள் அனைத்தும் படத்திற்கான கிரெடிட் மற்றும் படத்திற்கு கங்கனா செய்துள்ள சேதத்தைப் பற்றி நான் கேள்வி எழுப்பியபோது அவரது சகோதரி கங்கனா கூறிய வார்த்தைகளே. படத்தின் இரண்டு மாதிரிகளையும் பார்த்த நபர் நான் 85% இந்தப் படத்தை இயக்கியுள்ளேன் என்றே கூறுகிறார்.
இதில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்தான் இதனைக் கூறுகிறார். வாட்ஸ் ஆப் மெசேஜில் கங்கனா எழுதிய அனைத்தும் நான் கேள்வி எழுப்பிய போது கூறப்பட்டவைகளே, இவை அனைத்தும் பொய்கள், முன் கூட்டியே திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது என்று என்னால் அடித்துக் கூற முடியும்,
ஏனெனில் இவையெல்லாம் நடக்கும் நாள் வரும் என்று முன்பே அவர் திட்டமிட்டுள்ளார். இது பிற்பாடு மாற்றப்பட்ட எடிட்டர் கூறியதுதான். யார் எவ்வளவு அடி படம் எடுத்தார்கள் என்பதல்ல பிரச்சினை, அனைத்தும் அதன் செயலொழுங்கைப் பொறுத்தது. ஆனால் வேறு ஒரு நோக்கத்துக்காக இவையனைத்தும் மோசமாக எழுப்பப்பட்டு வருகிறது, தயவு செய்து உங்கள் பொய்களை உணருங்கள், நீங்கள் இன்னமும் விஷயங்களை மோசமாகவே ஆக்குகிறீர்கள்.
இவ்வாறு இயக்குநர் க்ரிஷ் தெரிவித்துள்ளார்.