தமிழகம் 'பேட்ட' ட்ரெய்லரிலும், மகாராஷ்டிரம் 'தாக்கரே' ட்ரெய்லரிலும் பரபரப்பாக இருக்க, தலைநகர் டெல்லியை உலுக்கிக் கொண்டிருக்கிறது 'தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' ட்ரெய்லர்.
இந்த ட்ரெய்லரை பாஜக அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. அத்துடன், "இந்த தேசத்தைப் பத்து ஆண்டுகள் கொள்ளையடித்த குடும்பத்தின் கதையை ஆணித்தரமாக சொல்லும் படம். காங்கிரஸ் கட்சியின் அடுத்த வாரிசு தயாராகும்வரை மன்மோகன் சிங், பிரதமர் நாற்காலியை அலங்கரித்துக் கொண்டிருந்தாரா என்ன? படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லரைப் பாருங்கள். படம் ஜனவரி 11-ல் ரிலீஸ்" எனப் பதிவிட்டுள்ளது. கிட்டத்தட்ட விளம்பர பாணியில் இந்த ட்வீட் உள்ளது.
பாஜக பிரமுகர்கள் பலரும் படத்தின் ட்ரெய்லரை வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியோ, "படத்தைத் திரையிடுவதற்கு முன் தங்கள் கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்கு படத்தை சிறப்புத் திரையிடல் செய்ய வேண்டும். இந்நாட்டை 10 ஆண்டுகள் ஆண்ட பிரதமரை களங்கப்படுத்தும் விதமாக ட்ரெய்லர் இருக்கிறது. ஒருவேளை சிறப்புத் திரையிடல் செய்யாவிட்டால் படத்துக்குத் தடை பெறுவோம்" என கொதித்து வருகிறது.
இவை ஒருபுறம் இருக்க, படத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்திருக்கும் பாலிவுட் மூத்த நடிகர் அனுபம் கேர், “எவ்வித சலனமும் இல்லாமல் படத்தைப் படமாகப் பாருங்கள். 10 ஆண்டுகள் ஆண்ட பிரதமரைப் பற்றிய படம் என்றால் காங்கிரஸ் இதைக் கொண்டாடத்தானே வேண்டும். அதுவும் பிரதமரின் ஆலோசகராக இருந்த சஞ்சய பருவாவின் கதைதான் படமாக்கப்பட்டிருக்கிறது. அவரைவிட பிரதமரை நெருக்கமாகப் பார்த்தவர்கள் யாராக இருக்க முடியும்? ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிப் படம் எடுத்தால் அதன் உண்மையைச் சொல்லித்தானே ஆக வேண்டும். அப்படித்தான் இதுவும்” என பேட்டியளித்திருக்கிறார்.
இத்தகைய சூழலில் தேசிய அரசியலில் தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் இன்னும் பெரிய அதிர்வலைகளை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.