தீபாவளி பட்டாசுன்னாதான் புகை வருமா? திருமணப் பட்டாசுன்னா பிரச்சினை இல்லையா என அண்மையில் திருமணம் செய்துகொண்ட பிரியங்கா சோப்ராவை நெட்டிசன்கள் கடுமையாக சாடியுள்ளனர்.
ஒரு மாதத்துக்கு முன்னதாக பிரியங்கா சோப்ரா பட்டாசு வெடிப்பதற்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தில் இருந்தார். ஆஸ்துமா நோயாளிகளின் சார்பில்.. இந்த தீபாவளிக்கு பட்டாசைக் கைவிடுங்கள் என அவர் கோரி வந்தார்.
ஆனால், கடந்த சனிக்கிழமை ஜோத்பூரில் நடந்த பிரியங்கா சோப்ரா - நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டாசு வெடிக்கப்பட்டது.
இதைச் சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள் தீபாவளி பட்டாசுன்னாதான் புகை வருமா? திருமணப் பட்டாசுன்னா பிரச்சினை இல்லையா? என பிரியங்கா சோப்ராவை கேள்விகளால் துளைத்து வருகின்றனர்.
இது தொடர்பான சில ட்வீட்களின் தொகுப்பு:
மகேஷ் வதர்கர்: தீபாவளி பட்டாசுன்னாதான் பிரச்சினை. திருமணப் பட்டாசு என்றால் ஆக்ஸிஜன் அதிகரிக்கும்.
லோகேஷ்: பிரியங்கா சோப்ராவுக்கு திருமணத்துக்கு ஒருநாள் முன்னதாக ஆஸ்துமா சரியாகிவிட்டது என நினைக்கிறேன்.
டாக்டர் ஜனக் பாண்டியா: சத்தம் எழுப்பாத, ஆக்ஸிஜன் வெளியேற்றும், சூழல் நட்பு வெடிகள் எங்கு கிடைக்கும் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் அடுத்த தீபாவளிக்காக நாங்கள் அதைச் சேமித்து வைத்துக் கொள்வோம்.
மருந்து நிறுவனத்தின் மீது விமர்சனம்
பிரியங்கா சோப்ராவை சாடிய அளவுக்கே சிப்லா என்ற மருந்து நிறுவனத்தையும் நெட்டிசன்கள் சாடியுள்ளனர். காரணம் பிரியங்கா சோப்ராவை சிப்லா நிறுவனம் தனது பிராண்ட் அம்பாசிடராகக் கொண்டுள்ளது. #BerokZindagi (Unstoppable Life) தடையற்ற வாழ்வு என்ற பிரச்சாரத்தின் முகவராக பிரியங்காவை அந்த நிறுவனம் நியமித்துள்ளது.
அதாவது, ஆஸ்துமா நோயாளிகளுக்காக இந்த தீபாவளியன்று பட்டாசுகளை தவிர்க்குமாறு செய்த பிரச்சாரத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
சிப்லா நிறுவனத்தின் அந்த விளம்பரத்தில் தோன்றும் பிரியங்கா, "எனது சுவாசம் தடைபடாமல் இருக்க தயவுசெய்து உதவுங்கள். அதற்கு இந்த தீபாவளிக்கு பட்டாசுகளைத் தவிருங்கள். தீபாவளி என்பது லட்டு மற்றும் தீப ஒளிக்கான நாள். அதை அன்பால் நிரப்புவோம். மாசால் அல்ல. பட்டாசுகளைக் குறைப்பீர். அதனால் என்னைப் போன்ற ஆஸ்துமா நோயாளிகளும் ஏன் விலங்குகளும்கூட இந்த நாளை இன்புற்றுக் கழிக்கலாம்" எனப் பேசியிருந்தார்.
இதைக் குறிப்பிட்டு ட்விட்டரில் ஒருவர், "பரவாயில்லையே சிப்லா பிரியங்காவின் ஆஸ்துமாவை இமைக்கும் நேரத்துக்குள் சரி செய்துவிட்டதே.. பாருங்கள் அவர் திருமண நிகழ்ச்சியில் பட்டாசுகள் வெடிப்பதைப் பார்த்து மகிழ்கிறார்" எனப் பதிவிட்டுள்ளார்.
அனுராதா என்ற வலைப்பதிவர், "சிப்லா, உங்களது பிராண்ட் அம்பாசிடர் பிரியங்கா சோப்ரா தீபாவளிக்கு எங்களைப் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர் மட்டும் பட்டாசு வெடிக்கிறார். உங்களது நடவடிக்கை என்ன? இல்லாவிட்டால் நாங்கள் வேறு பிராண்ட் மருந்தைத்தான் தேர்வு செய்ய வேண்டியிருக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து 'இந்து தமிழ் திசை' சார்பில் சிப்லா நிறுவனத்திடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, இது தொடர்பாக பதில் தெரிவிக்க விரும்பவில்லை என அந்நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.