பாலிவுட்

ஆமிர் கான் இல்லையென்றால் நான் இறந்திருப்பேன்: ஒலி வடிவமைப்பாளர் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

நடிகர் ஆமிர் கான் உரிய நேரத்தில் செய்த உதவி, தேசிய விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ஷாஜித் கோயேரியின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

உடல்நிலை சரியில்லாததால் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஷாஜித். அடுத்த சில நாட்களில் அவருக்குப் பக்கவாதப் பாதிப்பு ஏற்பட்டது. எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் இது உறுதியாகி, அவசர சிகிச்சைப் பிரிவில் அவரை அனுமதித்த பிறகும், மருத்துவர்கள் யாரும் இல்லாததால் சிகிச்சை தொடங்கப்படவில்லை. ஷாஜித்தின் நிலை மோசமாவதை உணர்ந்த குடும்பத்தினர், நடிகர் ஆமிர் கானின் உதவியை நாடினர். (‘தங்கல்’ படத்தின் ஒலி வடிவமைப்பாளர் ஷாஜித்).

நள்ளிரவில் இவர்களின் அழைப்பு வந்ததுமே, ஆமிர் கான் உடனே விரைந்து சென்று, ஷாஜித்தை அந்தேரியில் இருக்கும் அம்பானி குடும்பத்தினரின் மருத்துவமனையான கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றினார்.

காலை மூன்று மணிக்கு அனில் அம்பானி குடும்பத்தினரை உடனடியாகத் தொடர்பு கொண்ட ஆமிர் கான், விரைவான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். மருத்துவர்கள் ஷாஜித்துக்கு அவசர சிகிச்சை அளித்து, அவரது உடல்நிலையைச் சீராக்கினர்.

தற்போது குணமடைந்துள்ள ஷாஜித், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ஆமிர் கானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“ஆமிர் கான் இல்லாமல் நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என நினைக்கிறேன். அவர் தனிப்பட்ட முறையில் சூழலைக் கையாண்டு, மருத்துவர்களிடம் பேசினார். ’இவர் எனது ‘தங்கல்’ படத்தின் ஒலி வடிவமைப்பாளர். இவர் நல்ல நிலையில் மீண்டுவந்து, எனது அடுத்த படத்தில் பணியாற்ற வேண்டும்’ என்று மருத்துவர்களிடம் அவர் சொன்னதாக நான் பின்னர் அறிந்தேன். இது எனக்கு நல்ல ஊக்கம்.

தினமும் மருத்துவமனைக்கு வந்தோ அல்லது மருத்துவர்களை அழைத்தோ எனது நிலை பற்றித் தெரிந்துகொள்வார். இவர் என் பக்கம் இல்லையென்றால், இந்தப் போராட்டம் கடினமாகியிருக்கும். மிக்க நன்றி ஆமிர்” என்று ஷாஜித் குறிப்பிட்டுள்ளார்.

‘ஓம்காரா’ படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள ஷாஜித், ‘பிரமானு’, ‘ரங்கூன்’, ‘தல்வார்’, ‘ஹைதர்’, ‘ஆர்.ராஜ்குமார்’ உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் ஒலி வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

SCROLL FOR NEXT