பாலிவுட்

#மீ டூ எதிரொலி: பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுடன் இனி நடிக்க மாட்டேன்- அக்‌ஷய் குமார் அதிரடி

செய்திப்பிரிவு

'ஹவுஸ்புல் 4' படத்தின் இயக்குநர் சஜித் கான் மற்றும் நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, 'ஹவுஸ்புல் 4' படப்பிடிப்பை ரத்து செய்த அக்‌ஷய், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் உடன் இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

முன்னதாக, நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2008-ல் 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' இந்தி திரைப்படத்துக்கான பாடல் காட்சி ஒத்திகையின் போது, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என பரபரப்புப் புகார் கூறினார். அவருக்கு நடிகை ட்விங்கிள் கண்ணா ஆதரவு தெரிவித்தார்.

இதற்கிடையே தனுஸ்ரீ, ''நீங்கள் ஆதரவு தெரிவிக்கிறீர்கள்; ஆனால் உங்கள் கணவர் நானா படேகருடன் 'ஹவுஸ்புல் 4' படத்தில் நடிக்கிறாரே?'' என்று ட்விங்கிள் கண்ணாவிடம் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் அக்‌ஷய் குமார் 'ஹவுஸ்புல் 4' படப்பிடிப்பை ரத்து செய்துள்ளார்.

இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அக்‌ஷய், ''வெளிநாட்டில் இருந்து இப்போதுதான் இந்தியா திரும்பினேன். வெளியாகும் செய்திகள் அனைத்தும் என்னை மிகவும் பாதிக்கின்றன. அடுத்தகட்ட விசாரணை முடியும்வரை 'ஹவுஸ்புல் 4' படப்பிடிப்பை ரத்து செய்யுமாறு தயாரிப்பாளர்களைக் கேட்டுக் கொண்டேன்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் உடன் இனி நடிக்க மாட்டேன். பாலியல் சீண்டல்களுக்கு உள்ளானவர்களில் குரல்கள் கேட்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT