பாலிவுட்

வரலாற்றுக் கதையை இயக்கும் கரண் ஜோஹர்

செய்திப்பிரிவு

சிறிய இடைவெளிக்குப் பிறகு வரலாற்றுக் கதையைப் படமாக இயக்கப் போகிறார் கரண் ஜோஹர்.

பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘ஏ தில் ஹாய் முஷ்கில்’. 2016-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு, ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற படத்தின் ஒரு பாகத்தை மட்டும் இயக்கினார்.

இந்நிலையில், வரலாற்றுக் கதை ஒன்றைப் படமாக இயக்கப் போகிறார் கரண் ஜோஹர். இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கரீனா கபூர், அலியா பட், விக்கி கவுசல், புமி பெட்னேகர், ஜான்வி கபூர் மற்றும் அனில் கபூர் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்க இருக்கிறது.

“வரலாற்றில் உட்பொதிந்துள்ள மிகவும் பிரமாதமான கதை. கம்பீரமான முகலாய பீடத்துக்கான காவியப் போராட்டம். ஒரு குடும்பத்தின், லட்சியத்தின், பேராசையின், துரோகத்தின், காதலின், அடுத்து பீடத்தைப் பிடிப்பதற்கான பேரவாவின் கதை. ஆம், ‘தக்த்’ படம் அன்புக்கான போர்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கரண் ஜோஹர்.

இந்தப் படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. சுமித் ராய் திரைக்கதை எழுத, ஹுசைன் ஹைத்ரி மற்றும் சுமித் ராய் இருவரும் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். 2020-ம் ஆண்டு இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT