இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் அடுத்த படம் 'பைரவா கீதா' அதி தீவிரமான ஆக்சன் கலந்த காதல் கதையாக தயாரிக்கப்பட உள்ளது.
தயாரிப்பாளர் பாஸ்கருடன், ராம்கோபால் வர்மாவும் இணைந்து தயாரிக்கும் இப்படம் வர்க்க போராட்டங்களின் வன்முறை பின்னணி பற்றி பேச உள்ளதாக ட்விட்டர் வாயிலாக அவர் தெரிவித்துள்ளார்.
சித்தார்த்தா இயக்கும் இப்படத்தில் தனஞ்செய் மற்றும் இர்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். அதி தீவிரமான ஆக்சன் படம் இது. இதனுள் ஒரு நல்ல காதல் கதையும் இருக்கும். அதேநேரம் இரு வர்க்கங்களுக்கிடையே ஏற்படும் கடும் மோதலின் பின்னணியை இப்படம் விவரிக்கிறது.
நட்சத்திர நடிகர்களான தனஞ்செய் மற்றும் இர்ரா ஆகியோருடன் இப்படத்தில் இயக்குநராக சித்தார்தா அறிமுகமாகிறார்.
தனஞ்செய் ஏற்கெனவே, ஜாஸி, தகாரு, பேட்மேஷ் மற்றும் பாக்ஸர் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
வர்மா தற்போது "டி-கம்பெனி" என்ற வலைத் தொடரில் பிஸியாக இருக்கிறார், இதற்காக கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக அவர் நிறைய செய்திகள், தரவுகளை சேகரித்து வந்துள்ளார்.
தெலுங்கில் 1989ல் சிவா திரைப்படத்தின் மூலம் காலடியெடுத்து வைத்த ராம்கோபால் வர்மா, பின்னர் 1995ல் பாலிவுட்டிற்கு சென்று ரங்கீலா மூலம் புகழ் பெற்றார். அதிலிருந்து பாலிவுட்டில் சத்யா, கம்பெனி, சர்க்கார் உள்ளிட்ட நிறைய வெற்றிப் படங்களை இயக்கினார்.
இந்நிலையில் தற்போது அவர் பாஸ்கருடன் இணைந்து தயாரிக்கும் படம் பைரவா கீதா தெலுங்கு கன்னடம் இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது.