ஆமிர்கான் நடிக்க இருந்த, தாதா சாகேப் பால்கேவின் பயோபிக் படம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கைக் கதையை ராஜ்குமார் ஹிராணி இயக்குவதாகவும் ஆமிர்கான், பால்கே-வாக நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தின் கதையில் சில இடங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என ஆமிர்கான் கூறியதாகவும் இதனால் படப்பிடிப்பு தாமதமாகி வருவதாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளியாயின. ஆனால், இதை பால்கேவின் பேரன் சந்திரசேகர் ஸ்ரீகிருஷ்ணா புசல்கர் மறுத்திருந்தார். இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது என்றும் வித்யா பாலன், பால்கே மனைவியாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், பலமுறை கதை திருத்தம் செய்த பிறகும், ஆமிர்கானுக்கு திருப்தி இல்லாததால் இப்படத்தைத் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, இயக்குநர் ராஜமவுலியும் பால்கேவின் பயோபிக்கை இயக்க இருப்பதாகக் கடந்த 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதில் ஜூனியர் என்.டி.ஆர். பால்கே கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.