பாலிவுட்

மகாபாரத தொடரில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் காலமானார்

ஆனந்த்

மும்பை: புகழ்பெற்ற இந்தி மகாபாரத தொடரில் கர்ணனாக நடித்த பிரபல நடிகர் பங்கஜ் தீர் காலமானார். அவருக்கு வயது 68.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பங்கஜ் தீர், அதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நோய் தீவிரமடைந்ததை அடுத்து அவரது உடல்நிலை மேலும் மோசமாகி உள்ளது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

திரைப்படம் மற்றம் தொலைக்காட்சி கலைஞர்களின் சங்கம் இதனை உறுதிப்படுத்தியது. எங்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் பொதுச் செயலாளருமான பங்கஜ் தீர் அக்.15, 2025 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனம் பேவஃபா, பாட்ஷா போன்ற திரைப்படங்களிலும், சந்திரகாந்தா, சசுரல் சிமர் கா போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் பங்கஜ் தீர் நடித்துள்ளார். மை ஃபாதர் காட்பாஃதர் என்ற படத்தை அவர் இயக்கி உள்ளார். மேலும் அபினய் ஆக்டிங் அகாடமியை அவர் நிறுவியுள்ளார்.

முன்னதாக அவர் அளித்த பேட்டியில், “மகாபாரத கர்ணன் என்றால் பலருக்கும் நான்தான் நினைவுக்கு வருகிறேன். எனது கதாபாத்திர சிலைகளை வடித்து ஹரியானாவின் கர்னலிலும், பஸ்தரிலும் எனக்கு கோயில்கள் கட்டி இருக்கிறார்கள். கர்ணனாக மக்கள் என்னை வழிபடுகிறார்கள். பள்ளி பாடப்புத்தகங்களில் கர்ணன் குறித்த பாடம் இருந்தால் அதில் எனது படத்தையே வைத்திருக்கிறார்கள். எனவே, இந்த புத்தகங்கள் அச்சிடப்படும்வரை கர்ணன் என்ற பெயரில் நான் எப்போதும் இருப்பேன்.” என தெரிவித்துள்ளார்.

பங்கஜ் தீருக்கு அனிதா தீர் என்ற மனைவியும் நிகிதன் தீர் என்ற மகனும் உள்ளனர். நிகிதன் தீரும் ஒரு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT