பாலிவுட்

சர்ச்சில் காதல் காட்சி: ஜான்வி கபூர் படத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு போர்க்கொடி!

ப்ரியா

ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரம்சுந்தரி’. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியானது. தேவாலயம் ஒன்றில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதல் காட்சியுடன் அந்த ட்ரெய்லர் தொடங்கியது. இந்த காட்சிக்கு கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வாட்ச்டாக் அறக்கட்டளை என்ற பெயர் கொண்ட அந்த அமைப்பு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், மத்திய தணிக்கை வாரியம், மும்பை காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் அந்த காட்சியை படத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் அதில், “தேவாலயம் என்பது கிறிஸ்தவர்களுக்கு ஒரு புனிதமான வழிபாட்டுத் தலமாகும். அதை ஆபாசமான உள்ளடக்கத்திற்கான ஒரு மேடையாக சித்தரிக்கக்கூடாது. இந்த சித்தரிப்பு மத வழிபாட்டுத் தலத்தின் ஆன்மீக புனிதத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல், கத்தோலிக்க சமூகத்தின் உணர்வுகளையும் ஆழமாக புண்படுத்துகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

அந்த குறிப்பிட்ட காட்சியை பொதுத் தளங்களில் இருந்து நீக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இதில் தொடர்புடைய இயக்குநர், நடிகர்கள், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அந்த புகார் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

துஷார் ஜலோடா இயக்கியுள்ள ‘பரம்சுந்தரி’ படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

sidharth malhotra as param sachdev in param sundari (2025) pic.twitter.com/gdD7HfoPfh

SCROLL FOR NEXT