இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கப்படுபவர், தாதாசாகேப் பால்கே. இந்தியாவின் முதல் திரைப்படமாகக் கருதப்படும் ‘ராஜா ஹரிச்சந்திரா’வை 1913-ம் ஆண்டு இயக்கியவர். இவர் வாழ்க்கைக் கதையைத் தழுவி, ‘மேட் இன் இண்டியா’ என்ற தலைப்பில் படம் உருவாக இருப்பதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, கடந்த 2023-ம் ஆண்டு அறிவித்திருந்தார். வருண் குப்தாவும் எஸ்.எஸ். கார்த்திகேயாவும் இதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் சில வருடங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் தாதாசாகேப் பால்கேவாக ஜுனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆமிர்கான் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படமும் பால்கேவின் பயோபிக் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திரப் போராட்டப் பின்னணியில் உருவாகும் இதன் படப்பிடிப்பு, அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. ஒரே நேரத்தில் பால்கே-வின் வாழ்க்கைக் கதையை 2 பேர் இயக்குவது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.