பாலிவுட்

50 நாள் கடந்தும் மவுசு குறையாத ‘சாவா’ - பின்னுக்குச் சென்ற சல்மான் கான் படம்!

டெக்ஸ்டர்

மும்பை: திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களை கடந்த பிறகும் கூட ‘சாவா’ படத்துக்கான வரவேற்பு வடமாநிலங்களில் குறையாமல் உள்ளது.

ம​ராட்​டிய மாமன்​னர் சிவாஜி​யின் மகன் சத்​ரபதி சம்​பாஜி​யின் வாழ்க்கை வரலாற்றை அடிப்​படை​யாகக் கொண்டு பாலிவுட்​டில் கடந்த பிப்​ர​வரி 14-ம் தேதி ‘சா​வா’ என்ற திரைப்​படம் வெளி​யானது. லக்‌ஷமன் உடேகர் இயக்கிய இப்படத்தில் விக்கி கவுஷல் சம்பாஜி மகாராஜாவாகவும், அக்‌ஷய் கண்ணா அவுரங்கசீப்பாகவும் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் முகலாயர்களுக்கு எதிரான மராட்டிய மன்னனின் போராட்டத்தையும், இறுதியில் அவர் கைது செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதையும் சித்தரிக்கிறது. இந்தப் படம் வடமாநிலங்களில் பெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், படம் வெளியாகி 50 நாட்களை கடந்துவிட்ட பிறகும் கூட டிக்கெட் புக்கிங்கில் தொடர்ந்து ‘சாவா’ முன்னிலை வகித்து வருகிறது. எந்த அளவுக்கென்றால் அண்மையில் ரம்ஜான் பண்டிகையின்போது வெளியான சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படத்தையே ‘சாவா’ டிக்கெட் முன்பதிவில் பின்னுக்கு தள்ளியுள்ளது.

மேலும் ‘சாவா’ படம் வெளியான முதல் வாரத்திலேயே உலகம் முழுவதும் ரூ.219 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால் ‘சிக்கந்தர்’ படமோ முதல் வாரத்தில் இன்னும் ரூ.100 கோடியையே நெருங்கவில்லை. இதேபோல கடந்த ஆண்டு ஈத் பெருநாளின் போது வெளியான சல்மான் கானின் ‘கிஸி கா பாய் கிஸி கா பாய்’ திரைப்படமும் படு தோல்வியடைந்தது நினைவுகூரத்தக்கது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சிக்கந்தர்’. சாஜித் நாடியவாலா தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீஸர், ட்ரெய்லர் தொடங்கி அனைத்துமே மிக மோசமான விமர்சனங்களே பெற்றது.

SCROLL FOR NEXT