ஆகஸ்ட் 14-ம் தேதி ‘வார் 2’ வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
யாஷ் ராஜ் நிறுவனம் பல்வேறு ஸ்பைவர்ஸ் படங்களை தயாரித்து வருகிறது. ‘ஏக் தா டைகர்’, ‘டைகர் ஜிந்தா ஹாய்’, ‘வார்’, ‘டைகர் 3’ மற்றும் ‘பதான்’ ஆகிய படங்களை இதுவரை தயாரித்திருக்கிறது. தற்போது இதன் தொடர்ச்சியாக ‘வார் 2’ படத்தினை தயாரித்து வருகிறது. இதில் ஹ்ரித்திக் ரோஷனுடன் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வருகிறார்.
இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்கள். ஆனால், இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. சமீபத்தில் ஹ்ரித்திக் ரோஷனுக்கு காலில் அடிபட்டு இருப்பதால், இப்படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் இருக்கும் என கருதப்பட்டது.
இதனை பொய்யாக்கும் விதமாக, ஆகஸ்ட் 14-ம் தேதி ‘வார் 2’ வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘வார் 2’ படத்தின் தொடர்ச்சியாக ‘ஆல்ஃபா’ என்ற படத்தினையும் ஸ்பைவர்ஸில் தயாரித்து வருகிறது யாஷ் ராஜ் நிறுவனம். இதில் ஆலியா பட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.