‘ராமாயணா’ படத்தில் யஷ் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட படம் ‘ராமாயணா’. இதன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. தற்போது இதில் ராவணனாக நடிக்கும் யஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது. அவருடைய அறிமுக காட்சியினை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது.
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ராமாயணக் கதை திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில், ரன்பீர் கபூர் ராமராக நடிக்கிறார். சாய் பல்லவி, சீதையாக நடிக்கிறார். ராவணனாக யஷ், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங், நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் படம் உருவாகிறது.
நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இதைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.