‘புஷ்பா 2’ படத்தின் வசூல் குறையாத சூழலில், ‘பேபி ஜான்’ படத்தின் வசூல் பின்தங்கியுள்ளது. இந்தியில் ‘புஷ்பா 2’ படத்தின் வசூல் குறையாமல் தொடர்ச்சியாக முதல் இடத்திலேயே இருக்கிறது. அங்கு மட்டும் 700 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்திருக்கிறது. மேலும், உலகளவில் ‘புஷ்பா 2’ படத்தின் வசூலில் 1,700 கோடியை கடந்துவிட்டதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனிடையே, கிறிஸ்துமஸ் விடுமுறையை கணக்கில் கொண்டு வெளியாகியுள்ள படம் ‘பேபி ஜான்’. தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக் இது. வருண் தவான், கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சல்மான் கான் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ‘புஷ்பா 2’ படத்தின் வரவேற்புக்கு முன்னால் பின்தங்கியிருக்கிறது. முதல் நாளில் ரூ.11.25 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இது மூன்றாவது வாரத்தில் இருக்கும் ‘புஷ்பா 2’ படத்தின் அன்றைய தினத்தின் வசூலை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ‘பேபி ஜான்’ படத்துக்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமன்றி ‘தெறி’ படத்தில் இருந்த ஈர்ப்பு இப்படத்தில் இல்லை என்று பலரும் தெரிவித்துள்ளனர். வார இறுதி நாட்களில் இதன் வசூல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.