பாலிவுட்

“மகாபாரதத்தை படமாக்க ஆசை. ஆனால்…” - நடிகர் ஆமீர்கான் பகிர்வு

செய்திப்பிரிவு

மும்பை: “மகாபாரதத்தை திரைப்படமாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அதில் தவறு நிகழ்ந்து விடுமோ என பயப்படுகிறேன். எனவே, அதை சரியாக புரிந்துகொண்டு தவறில்லாமல் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன். ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப் படுத்த விரும்புகிறேன்” என நடிகர் ஆமீர்கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “மகாபாரதத்தை திரைப்படமாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது மிகப் பெரிய படைப்பு. அதில் தவறு நிகழ்ந்து விடுமோ என பயப்படுகிறேன். இது மிகப் பெரிய பொறுப்பு. ஏனென்றால், இந்தியர்களாகிய நமது ரத்தத்தில் கலந்திருக்கும் மிகவும் நெருக்கமான ஒரு படைப்பு. எனவே, அதை சரியாக புரிந்துகொண்டு தவறில்லாமல் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்த விரும்புகிறேன். இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்ற விரும்புகிறேன். இது நடக்குமா என தெரியவில்லை. இருப்பினும் அப்படியான ஒரு படைப்பை உருவாக்குவது எனது விருப்பம். பார்ப்போம்” என்றார்.

மேலும், திரைத் துறையிலிருந்து விலகும் முடிவு குறித்து பேசிய அவர், “நடிப்பதை முடித்துக் கொள்கிறேன் என குடும்பத்திடம் கூறினேன். இனிமேல் உங்களுடனேயே இருக்க விரும்புகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘நாங்கள் 24 மணி நேரமும் உங்களுடனேயே இருக்க முடியாது. எனவே யதார்த்தை பற்றி யோசியுங்கள்’ என்று சொல்லிவிட்டனர். அதனால், அடுத்த 10 ஆண்டுகளில் வருடத்துக்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அதேசமயம் எனக்குப் பிடித்த கதைகளை அதிகம் தயாரிக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT