பிரபல நடன இயக்குநர் ரெமோ டிசோசா. ஏராளமான பாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள இவர், சல்மான்கான் நடித்த ‘ரேஸ் 3’, பிரபுதேவா நடித்த ‘ஏபிசிடி’ உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். ஏபிசிடி படம் தமிழிலும் வெளியானது. சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருக்கிறார்.
இந்நிலையில், ரெமோ டிசோசா, அவர் மனைவி லிஸெல் உட்பட6 பேர் மீது, ரூ.11.96 கோடி மோசடி செய்ததாக, தானே-வைச்சேர்ந்த நடனக்கலைஞர் ஒருவர் புகார் கொடுத்தார். அதில், சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் எங்கள் நடனக்குழு வெற்றி பெற்றது. ஆனால், ரெமோ டிசோசா, அதை அவர்கள் குழு என்பது போல காட்டி பரிசு பணத்தை மோசடி செய்துவிட்டதாகக் கூறியுள்ளார். தானே, மீரா ரோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்த செய்தி பரவிய நிலையில், ரெமோ டிசோசாவின் மனைவி லிஸெல் வெளியிட்டுள்ள பதிவில், “மோசடி புகார் அளிக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தியை ஊடகங்கள் மூலம் அறிந்தோம். உண்மை தெரியாமல் ஊடகங்கள் வதந்தி பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் தரப்பு விளக்கத்தை சரியான நேரத்தில் முன் வைப்போம். விசாரணைக்கும் தொடர்ந்து ஒத்துழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.