மும்பை: அஜய் தேவ்கன் நடித்துள்ள ‘சிங்கம்’ பட வரிசைகளின் சீக்வலாக ‘சிங்கம் அகெய்ன்’ (singham again) பாலிவுட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் எப்படி?: கிட்டத்தட்ட 5 நிமிடத்துக்கு வெளியிடப்பட்டுள்ளது ட்ரெய்லர். தொடக்கத்தில் மந்திரம் ஒலிக்கும் சப்தத்துடன் இன்ட்ரோ கொடுக்கிறார் அஜய் தேவ்கன். அடுத்து கரீனா கபூர். அஜய் தேவ்கன், கரீனா கபூரிடம் அவரது மகன், “ராமர், சீதாவை மீட்டு கொண்டுவர 3ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டாரா?” என கேட்க, “ஆம் உண்மை தான். உங்கள் தலைமுறைக்கு உண்மை காதலின் கான்செப்ட் புரிவதில்லை” என்கிறார் கரீனா கபூர்.
“உங்களை ராவணன் போல யாராவது கடத்திச் சென்றால், அப்பா காப்பாற்றுவாரா?” என பையன் கேட்க, உடனே அவரை கடத்தும் வகையிலான காட்சிகள் காட்டப்படுகிறது. பின்பு, “கூகுளில் உன் அப்பா யார் என்று தேடிப்பார் அப்போது தெரியும் என்னைப்பற்றி” என்கிறார் அஜய் தேவ்கன். ராமாயண ரெஃபரன்ஸ், ஓவர் பில்டப், ஆக்ஷன் காட்சிகள் என ட்ரெய்லரின் 1 நிமிடத்துக்குள்ளேயே மசாலாவை தூவியிருக்கிறார் இயக்குநர் ரோகித் ஷெட்டி. அப்படியென்றால் மொத்தம் படம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம்.
தேசிய கொடி, அனுமான், கோயில்கள், சீதா, ராமன், ராவணன், இதிகாசங்கள் என பயணிக்கும் ட்ரெய்லரில் தீபிகா படுகோன், டைகர் ஷெராஃப் மாஸ் என்ட்ரி. குறிப்பாக ரன்பீர் கபூர், அக்ஷய் குமார் என்ட்ரி அட்டகாசம். ராமயண கதையை உல்டாவாக்கி இந்தப்படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. படம் நவம்பர் 1-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
சிங்கம் அகெய்ன்: கடந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் வெளியானது ‘சிங்கம்’ திரைப்படம். 2014-ல் ‘சிங்கம் ரிட்டர்ன்’ வெளியானது. இரண்டு படங்களும் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை குவித்தன. தற்போது இதன் சீக்வலாக ‘சிங்கம் அகெய்ன்’ 3-வது பாகமாக உருவாகியுள்ளது. அதில் அஜய் தேவ்கன், கரீனா கபூர், தீபிகா படுகோன், ஜாக்கி ஷெராஃப், டைகர் ஷெராஃப், ரன்பீர் கபூர், அக்ஷய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ட்ரெய்லர் வீடியோ: