புதுடெல்லி: பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு 2022-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத் துறையில் அவர் கடந்து வந்த பாதை குறித்து தற்போது சுருக்கமாகப் பார்ப்போம்.
மிதுன் தா என்றும் அழைக்கப்படும் மிதுன் சக்ரவர்த்தி, ஒரு நடிகர் மட்டுமல்ல, தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியும்கூட. அவர் தனது பலவகையான பாத்திரங்கள் மற்றும் தனித்துவ நடன பாணிக்காக கொண்டாடப்படக் கூடியவர். மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் 1950, ஜூன் 16 அன்று பிறந்த மிதுன் சக்ரவர்த்தி, தனது முதல் படமான "மிரிகயா" (1976)-வில் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். மதிப்புமிக்க இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (எஃப்.டி.ஐ.ஐ) முன்னாள் மாணவரான மிதுன் சக்ரவர்த்தி, தனது கலைத் திறமையை மெருகேற்றி, சினிமாவில் புகழ்பெற்ற வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தார்.
மிருணாள் செனின் படத்தில் ஒரு சந்தால் கிளர்ச்சியாளராக அவர் நடித்தது அவருக்கு தேசிய பாராட்டைப் பெற்றுத் தந்தது. "டிஸ்கோ டான்சர்" (1982) படத்தில் மிதுன் ஏற்ற பாத்திரத்தின் மூலம் குறிப்பிடத்தக்க புகழ் பெற்றார். இந்தப் படம் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பெரும் வெற்றியைப் பெற்றது. அக்னிபத் படத்தில் இவரது நடிப்பு 1990-ம் ஆண்டில் சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது.
தகதேர் கதா (1992), சுவாமி விவேகானந்தா (1998) ஆகிய படங்களில் நடித்ததற்காக மேலும் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றார் மிதுன் தா. இந்தி, பெங்காலி, ஒடியா, போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 350-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் மிதுன் தா. சிறந்த நடிகருக்கான மூன்று தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
மிதுன் தா தனது சினிமா சாதனைகளுக்காக மட்டுமின்றி, சமூகப் பணிகளில் அவரது அர்ப்பணிப்புக்காகவும் கொண்டாடப்படுகிறார். கல்வி, சுகாதாரம் மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு தொண்டு நடவடிக்கைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இது சமூகத்துக்கு திருப்பித் தருவதற்கான அவரது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அவர், மக்கள் சேவை மற்றும் நிர்வாகத்துக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏறக்குறைய ஐந்து தசாப்தங்களாக நீடித்த திரைப்பட வாழ்க்கையில், மிதுன் சக்ரவர்த்தி ஏராளமான விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இது இந்திய சினிமாவுக்கு அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரித்துள்ளது. இந்திய சினிமாவுக்கு அவர் செய்த சிறந்த பங்களிப்புகளுக்காக அண்மையில் மதிப்புமிக்க பத்ம பூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 2024 அக்டோபர் 8 செவ்வாயன்று நடைபெறவுள்ள 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மிதுன் சக்ரவர்த்திக்கு 2022-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.
மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது, மிதுன் சக்ரவர்த்தியின் கலை வலிமையை அங்கீகரிப்பது மட்டுமின்றி, பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய கருணையுள்ள, அர்ப்பணிப்புள்ள தனிநபராக அவரது நீடித்த மரபையும் அங்கீகரிக்கிறது.