பாலிவுட்

10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மனீஷா கொய்ராலா, சஞ்சய் தத்

செய்திப்பிரிவு

2010-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘பிரஸ்தானம்’ ஆகும். இந்தப் படம் இந்தியில் ரீ-மேக் ஆகவுள்ளது.

இந்த இந்தி ரீ-மேக்கில் சஞ்சய் தத் மகனாக அலி ஃபாஸல் நடிக்கிறார், ஆமிரா தஸ்துர், அலி ஃபாஸலின் ஜோடி. இந்தப் படத்தில் சஞ்சய் தத்தின் மனைவியாக நடிக்க மனீஷா கொய்ராலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் ஷூட்டிங், சஞ்சய் தத்தின் தாயாரான நர்கிஸ் தத்தின் 89வது பிறந்த தினத்தில் லக்னோவில் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது.

பெரோஸ் கானின் 1992-ம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் படமான யல்காரில் முதன் முதலில் சஞ்சய் தத், மனீஷா கொய்ராலா சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு ஹிட் ஜோடியான இவர்கள் சனம், கர்டூஸ், காஃப், பாகி ஆகிய படங்களிலும் சேர்ந்து நடித்தனர்.

கடைசியாக 2008-ல் அஃப்சல் கானின் ரொமான்ஸ் படமான மெஹ்பூபாவில் சஞ்சய் தத், மனீஷா கொய்ராலா சேர்ந்து நடித்தனர், அதன் பிறகு படங்கள் இல்லை.

தற்போது இவர்கள் மீண்டும் இணையும் செய்தியை உறுதி செய்த பட இயக்குநர் தேவ கட்டா (இவர்தான் 2010 தெலுங்கு படமான பிரஸ்தானத்தை இயக்கியவர்) “10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கின்றனர், இந்தத் திரைக்கதைக்கு சஞ்சய் தத்தின் ஜோடியாக மனீஷா கொய்ராலா நிச்சயம் வெகுபொருத்தமாக இருப்பார்” என்றார்.

பிரஸ்தானம் படத்திற்கு 3 பிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் நந்தி விருதுகள் கிடைத்தன. இந்தப் படம் ஒரு பொலிடிக்கல் திரில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT