இந்தி படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று, வாசு பக்னானியின் பூஜா என்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் கோவிந்தா நடித்த ‘கூலி நம்பர் 1’, ‘ஹீரோ நம்பர் 1’, சல்மான் கானின் ‘பீவி நம்பர் 1’ உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளது. கரோனாவுக்கு பிறகு இந்நிறுவனம் தயாரித்த படங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்தன. இப்போது இந்த நிறுவனத்தை வாசு பக்னானியின் மகன் ஜாக்கி பக்னானி கவனித்து வருகிறார். இவர், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர்.
இந்நிறுவனம் 2021-ல் அக்ஷய்குமார் நடிப்பில் ‘பெல்பாட்டம்’ என்ற படத்தை தயாரித்தது. இது ஓடவில்லை. அடுத்து டைகர் ஷெராஃப், அமிதாப்பச்சன் நடித்த ‘கண்பத்’, அக்ஷய் குமார் நடித்த ‘படே மியான் சோட்டே மியான்’ ஆகிய படங்களை தயாரித்தது. அவை ஓடாததால் கடும் நஷ்டம் ஏற்பட்டது. ரூ.350 கோடி செலவில் உருவான ‘படேமியான் சோட்டே மியான்’, வெறும் ரூ.59.17 கோடியை மட்டுமே வசூலித்தது. கடன் அதிகமானதால் மும்பையின் மையப்பகுதியில் இருந்த இந்நிறுவனத்துக்குச் சொந்தமான 7 மாடி அலுவலகத்தை விற்றுவிட்டனர்.
அங்கு அடுக்குமாடி குடியிருப்பு வர இருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு ஊழியர்களில் 80 சதவிகிதம் பேரை அனுப்பிவிட்டனர். தங்கள் அலுவலகத்தை மும்பை ஜுஹு பகுதியில் 2 படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றியுள்ளனர்.