மும்பை: நிதேஷ் திவாரி இயக்கத்தில், ராமாயணக் கதை திரைப்படமாக உருவாகிறது. இதில், ரன்பீர் கபூர் ராமராக நடிக்கிறார். சாய்பல்லவி, சீதையாக நடிக்கிறார்.
ராவணனாக யாஷ், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங், நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் படம் உருவாகிறது. நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இதைத் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. சாய் பல்லவி, ரன்பீர் சிங்கின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் கசிந்தன. இந்நிலையில் இந்தப் படத்துக்கான காப்புரிமை தொடர்பாக, தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், மது மண்டேனாவின் அல்லு மன்டேனா மீடியா வென்ச்சர்ஸ் எல்எல்பி நிறுவனம் சார்பில் பிரைம் ஃபோக்கஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
'ராமாயணம்' படத்தின் ஸ்கிரிப்ட் உரிமை தங்களிடம் இருப்பதாகவும், பிரைம் போக்கஸ் அல்லது வேறு யாரும் இந்த ஸ்கிரிப்டைப் பயன்படுத்தினால், அது காப்புரிமை மீறல் என்று எச்சரித்துள்ளது. பிரைம் ஃபோக்கஸ் நிறுவனம் ஸ்கிரிப்ட் உரிமையைப் பெற முயற்சித்ததாகவும், ஆனால் பணம் செலுத்தத் தவறிவிட்டதாகவும் அல்லு மன்டேனா மீடியா வென்ச்சர்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்தச் சர்ச்சை காரணமாக இதன் படப்பிடிப்பு தாமதமாகும் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தை முதலில் அல்லு மன்டேனா மீடியா வென்ச்சர்ஸ் எல்எல்பி, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ், அல்லு அரவிந்த் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை இரண்டு வருடங்களாக நடந்துவந்தன. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மூவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.