புது டெல்லி: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவருக்கு சொந்தமான ரூ.97.79 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. பிட்காயின் மோசடி வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிட்காயின் மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது வழக்குப் பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.97.79 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
மும்பை ஜூகுவில் உள்ள ஷில்பா ஷெட்டி பெயரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புனேவில் இருக்கும் பங்களா மற்றும் ராஜ் குந்த்ராவின் மற்ற சொத்துகளையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
வழக்கின் பின்னணி: கடந்த 2017-ம் ஆண்டு ‘Gain bitcoin’ என்ற பெயரில் முதலீட்டாளர்களுக்கான திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது பிட்காயினில் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 10 சதவீதம் லாபம் பெறலாம் என அறிவித்து வேரியபிள் டெக் லிமிடெட் என்ற நிறுவனம் நாடு முழுவதும் முதலீட்டாளர்களிடமிருந்து பணம் பெற்று ரூ.6,600 கோடி அளவில் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கோனார் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த வழக்கில் அஜய் பரத்வாஜ் மற்றும் மகேந்திர பரத்வாஜ் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். மகாராஷ்டிரா மற்றும் டெல்லி காவல் துறையால் பல எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அமலாக்கத் துறை இந்த வழக்கின் விசாரணையை கையிலெடுத்தது. இதில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
உக்ரைனில் பிட்காயின் ஆலை அமைக்க முக்கிய குற்றவாளியான அமித் பரத்வாஜியிடமிருந்து, ராஜ் குந்த்ரா 285 பிட்காயின்களை வாங்கியதாக விசாரணையில் தெரியவந்தது. ரூ.150 கோடி மதிப்புள்ள அந்த 285 பிட்காயினை ராஜ்குந்த்ரா வைத்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. இதையடுத்து தற்போது அவரது சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.