ரிதுராஜ் சிங் 
பாலிவுட்

இந்தி நடிகர் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்

செய்திப்பிரிவு

மும்பை: இந்தி நடிகர் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59. அவரது மறைவுக்கு நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், சோனு சூட் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியில் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்தவர் ரிதுராஜ் சிங். ‘ஹம்ப்ட்டி ஷர்மா கி துல்ஹனியா’, ‘சத்யமேவே ஜெயதே 2’, ‘யாரியான் 2’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார். இதுதவிர, ஏராளமான சீரியல்களிலும் ரிதுராஜ் நடித்துள்ளார். கடைசியாக ‘இண்டியன் போலீஸ் ஃபோர்ஸ்’ வெப் தொடரில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 12.30 மணியளவில் ரிதுராஜ் சிங் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இந்தி திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மனோஜ் பாஜ்பாய் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இது எப்படி உண்மையாக இருக்கமுடியும்? கண்விழிக்கும்போது இப்படி ஒரு அதிர்ச்சிகரமான செய்தி. உன் ஆன்மா சாந்தி அடையட்டும் என் நண்பா ரிதுராஜ்” என்று கூறியுள்ளார்.

இயக்குநர் ஹன்சல் மேத்தா தனது எக்ஸ் பதிவில், “ரிதுராஜ்! என்னால் நம்ப இயலவில்லை. ‘கே ஸ்ட்ரீட் பாலி ஹில்’ என்ற ஒரு சீரியலில் அவரை நான் குறைவான நாட்கள் இயக்கியுள்ளேன். ஆனால் நாளடைவில் நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம். நாங்கள் சந்தித்து வெகு நாட்களாகிவிட்டது. ஆனால் என்னிடம் அதுகுறித்த இனிமையான நினைவுகள் உள்ளன. பயன்படுத்தப்படாத நடிகர் மற்றும் இதமான மனிதர். திடீரென்றும், மிக விரைவாகவும் சென்றுவிட்டார்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சோனு சூட், தனது எக்ஸ் பக்கத்தில் ரிதுராஜின் புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT