பாலிவுட்

“பில்கிஸ் பானு வழக்கை படமாக்க கதை ரெடி. ஆனால்...” - கங்கனா பகிர்வு

செய்திப்பிரிவு

மும்பை: குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவின் வழக்கை திரைப்படமாக எடுப்பதற்கான கதை தயாராக இருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவரின் கேள்விக்கு அவர் இதுகுறித்து பதிலளித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட குஜராத் அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் நேற்று (ஜன.08) ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பு இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், பில்கிஸ் பானுவின் வழக்கை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று நெட்டிசன் ஒருவர், நடிகை கங்கனாவை டேக் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள கங்கனா ரனாவத் தனது பதிவில், “நான் அந்தக் கதையை படமாக எடுக்க விரும்புகிறேன். கதையும் ரெடியாக உள்ளது. இது குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளேன். ஆனால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் சில நிறுவனங்கள் அரசியல் ரீதியிலான படங்களை தாங்கள் எடுப்பதில்லை என்று எனக்கு பதில் எழுதியுள்ளனர்.

அதுமட்டுமின்றி கங்கனா பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று ஜியோ சினிமா கூறிவிட்டது. ஜீ நிறுவனம் வேறொரு நிறுவனத்துடன் இணையப் போகிறது. எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது?” என்று கங்கனா பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT