சர்ச்சைக்குள்ளான 'பத்மாவதி' திரைப்படம் 'பத்மாவத்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தை வெளியிட கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தப் படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இதன்காரணமாக 'பத்மாவதி' திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளிப்போனது. சென்சார் ஒப்புதல் கிடைக்காததால் டிசம்பர் 1-ம் தேதி வெளியீடு தள்ளிப்போனது.
இந்நிலையில், 'பத்மாவதி' திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது மத்திய திரைப்பட தணிக்கைக் குழு.
இந்த நிலையில் 'பத்மாவதி' திரைப்படம் 'பத்மாவத்' என்ற பெயரில் வரும் ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து ஐ ஏ என் எஸ் செய்தி நிறுவனம், ''வயாகாம் 18 மோஷன்ஸ் திரைப்பட நிறுவனம் பத்மாவத் திரைப்படம் ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வருகிறது என்றும், திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.