மும்பை: விக்ரம் நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கிய படம், ‘கடாரம் கொண்டான்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தில், வில்லனாக நடித்தவர் இந்தி நடிகர் விகாஸ் ஸ்ரீவஸ்தவ். மணிரத்னம் இயக்கிய ‘ராவணன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள இவர், இப்போது ‘விகாஸ் ஸ்ரீவஸ்தவ் டப்பிங் கம்பெனி’ என்கிற பெயரில் சொந்தமாக நிறுவனம் தொடங்கியுள்ளார்.
“கடந்த 22 வருடங்களாக ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட், கோலிவுட் ஆகியவற்றில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். மணிரத்னம், கமல்ஹாசன், விக்ரம், ஆமிர்கான், ஹாலிவுட் நடிகர் ஸ்டீபன் லேங் என இவர்கள் அனைவருடன் பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளேன். இப்போது டப்பிங் நிறுவனம் தொடங்கியுள்ளேன். கிச்சா சுதீப், உபேந்திரா நடித்த 'கப்ஜா'வுக்கு இந்தியில் டப்பிங் பேசினேன். 'டைகர் நாகேஸ்வர் ராவ்' உட்பட பல படங்களில் டப்பிங் பணிகளை செய்துள்ளேன். இந்தியில் இதுவரை டப்பிங் செய்யப்பட்ட அனைத்து தென்னிந்தியப் படங்களிலும் இயக்குநர் எதற்கு முதலிடம் கொடுத்திருந்தாரோ அந்த சாரம் இருப்பதில்லை. அவற்றின் நிஜத்தன்மையைத் தக்கவைத்து முழுமையாக அவற்றை மொழிமாற்றம் செய்வதே என் நோக்கம். ஓர் இயக்குநர் ஒரு படப்பிடிப்பு தளத்தில் என்ன செய்வாரோஅதேபோல் கொடுப்பதற்கு எனது ஸ்டுடியோ மூலமாக கடினமாக உழைக்கிறேன்” என்கிறார் விகாஸ் ஸ்ரீவஸ்தவ்.